×

சீமானுக்கு சம்மன்! செப்.11ல் நேரில் ஆஜராக உத்தரவு

 

ஈரோட்டில்  அருந்ததியர் சமூகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 11.ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு  ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது ஈரோடு திருநகர் காலனியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றும் போது அருந்ததியர் சமூகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக தலித் அமைப்பினர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்தனர்.

இதனை விசாரித்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் பிப்ரவரி 22-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் விசாரணை வரும் 11.ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த சீமானிடம் போலீசார் சம்மனை நேரில் வழங்கி உள்ளனர்.