×

  ₹4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்

 

 தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  இதன் காரணமாக ₹4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த 22ஆம் தேதி  போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாள்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார்.  நயினார் நகேந்திரனின் வழக்கறிஞர் தாம்பரம் ஆய்வாளர் பால முரளியை சந்தித்து கடிதத்தை வழங்கினார். இதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் 2ஆவது முறையாக சம்மன் வழங்கினர்.  மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். 

இதை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையோரிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  வழக்கின் ஆவணங்கள் கடந்த 28ஆம் தேதி  ஒப்படைக்கப்பட்ட நிலையில், செல்வாக்கை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் முருகன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிடிபட்ட ஓட்டல் ஊழியர்களிடம் நேற்று முன்தினம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.