×

துணை முதல்வர் உதயநிதிக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து.. ‘சமூக நீதி காப்பதில் சமரசம் இல்லாத போராளி’ - சத்யராஜ் புகழாரம்.. 

 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த  உதயநிதி ஸ்டாலினுக்கு,  தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இதேபோல் நடிகர் சத்யராஜுன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும், இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “ இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் மானமிகு, மான்புமிகு அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.  சமூக நீதி காப்பதில் சமரசம் இல்லாத போராளியாக திகழும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் பெரியாரின் தொண்டனாக பெருமை கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.