×

நான் ஒரு மலையாளி மகனாக இருந்தாலும் பட்டாசு தொழிலை பாதுகாக்க பாடுபடுவேன்: சுரேஷ் கோபி

 

மலையாளியாக இருந்தாலும் தமிழ் பண்பாடு மீது பற்று கொண்ட மகனாக பட்டாசு தொழிலை பாதுகாக்க வாதாடுவேன் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.


சிவகாசியில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ்கோபி பங்கேற்று வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து, விபத்தில்லா பட்டாசு தயாரிப்பை மேற்கொள்ளவும், அரசு விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டுமென்பது போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது பட்டாசுஉற்பத்தியாளர்கள் தரப்பில் பட்டாசு தொழிலை பாதுகாப்பது சம்மந்தமாக பல்வேறு கோரிக்கைகள் அமைச்சர் சுரேஷ்கோபி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முன்பாக விவாதித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பட்டாசு தொழில் பிரச்சனையில் வெடிவிபத்து, பொழுது போக்கின் மதிப்பு, விற்பனையின் மதிப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்தொழில் எவ்வாறு முதன்மை பெறுகிறது. பட்டாசு தொழில் மூலமாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை கிடைக்கின்றது என்பதெல்லாம் முக்கியம் என்பதை பொறுத்து பட்டாசு தொழில் முதன்மை பெறுகிறது. பட்டாசுத் தொழில் உற்பத்தியில் புதிய சிந்தனைகளை புகுத்தி விபத்தில்லா பட்டாசு, மாசு இல்லா பட்டாசு தொழிலை  உருவாக்க அடித்தளம் அமைக்கும் களம் அமைக்கப்பட்டு விட்டது.

பட்டாசு தொழில் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய கலந்துரையாடலை ஆவணப்படுத்தி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைத்து, பட்டாசு தொழிலை தொடர்ந்து பாதுகாக்க, தமிழ்நாட்டையும் தமிழ் பண்பாட்டை நேசிக்கும் ஒருவனாக  மலையாளத்தின் மகனாக அவரிடம் பட்டாசுதொழிலை பாதுகாக்க முயற்சி செய்வேன். மேலும் பட்டாசு தொழிற்சாலைகளின் வெடி விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில்  தாமதம் ஏற்பட்டு வருகிறது, கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வெடிவிபத்திற்கான அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. இதுபோன்ற தாமதம் தாங்க முடியாத பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்” என்றார்.