×

தாம்பரம் டூ வேளச்சேரி புதிய மெட்ரோ ரயில்- வெளியான முக்கிய தகவல்

 

தாம்பரம்-வேளச்சேரி- கிண்டி வரை (26கி.மீ) புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான "Traffic study" இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதற்கட்டமாக 54.1 கி.மீ தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 116 கி.மீட்டருக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் பல புதிய வழித்தடங்களை  கண்டறிந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வுகளை  மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் பூந்தமல்லி வரையிலும்,(17 கி.மீ), மாதவரம் முதல் நல்லூர் வரையில் (10 கி.மீ ), பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையில் (43.63 கி.மீ), கோயம்பேடு முதல் ஆவடி வரையில் (16.07கி.மீ), சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரையில் (23.5 கி.மீ), மாதவரம் முதல் விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரை 16( கி.மீ) என மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து மெட்ரோ ரயில் சாத்தியத்திற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் தென் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடமான   தாம்பரம் - வேளச்சேரி- கிண்டி வரையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான traffic study இறுதி கட்டடத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே, தாம்பரம் முதல் வேளச்சேரி வரையில்  மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அந்த ஆய்வின் முடிவில்  போதுமான எண்ணிக்கையில் மக்கள் அந்த வழித்தடத்தை பயன்படுத்தாததால் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வேளச்சேரி வழியாக தாம்பரம்  செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மீண்டும் மறு ஆய்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த சில மாதத்திற்கு முன்பு முடிவு செய்து அதனை கிண்டி வரையில் இணைக்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக தாம்பரம் வேளச்சேரி வழியாக கிண்டிக்கு வரும் இந்த புதிய வழித்தடத்தை, கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இணைப்பதா அல்லது சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இணைப்பதா என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வுகளை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டி வரையில் 26 கி.மீ  புதிய  வழித்தடத்திற்கான traffic study இறுதி கட்டடத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்விற்கு அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அடுத்ததாக சாத்தியகூறு ஆய்வு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.