×

 ‘லேட்டரல் என்ட்ரி முறை சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..  

 


மத்திய அரசுத் துறைகளின் பணியிடங்களுக்கு லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அண்மையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி, லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 துணை செயலாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது.  இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். 

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ சமூகநீதியை நிலைநிறுத்தவும்,  இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அதன் சரியான அமலாக்கத்தை உறுதிப்படுத்தவும், பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

 Lateral Entry என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதலாகும். தகுதிவாய்ந்த SC, ST, OBC மற்றும் சிறுபான்மை அதிகாரிகளின் மேல்நிலையில் தகுதியான வாய்ப்புகளைப் பறிக்கிறது. மத்திய அரசு இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும். ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டிகளுக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் நியாயமான மற்றும் சமமான பதவி உயர்வுகளை உறுதி செய்ய வேண்டும்.

 நாங்கள் எப்பொழுதும் எதிர்க்கும் கிரீமிலேயரை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று கோருகிறோம். இதற்கிடையில்,  Creamy Layer-இன் தேக்கநிலை உச்சவரம்பு மேலும் தாமதமின்றி உயர்த்தப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்று ரீதியாக உரிமை மறுக்கப்பட்ட நமது சமூகத்தின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்க நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது.” என்று குறிப்பிட்டுள்ளார்.