×

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

 


ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 

  78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி  தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும்  ஆளுநர் மாளிகையில்  இன்று  தேநீர் விருந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக , விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.  

ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக   காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.  இதனைத்தொடர்ந்து நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார்.  மேலும் அரசு சார்பில் கலந்துகொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்றும் அவர் கூறியிருந்தார். 

அதன்படி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் அவரது பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைப்பாடு என்பது வேறு எனவும், ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு உள்ளது எனவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.