“செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ₹400 கோடி முதலீடு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ. 400 கோடி முதலீட்டை பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த 29ம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவில் ஓமியம் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எலக்ட்ரோ லைஸர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக 500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமியம் நிறுவனமானது அமெரிக்கா, மெக்சிக்கொ, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் முழுவதும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் திட்ட குழாய்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில், புலம்பெயர் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், உழைப்பு, திறமை, தன்னம்பிக்கையால் இந்திய வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர் என பெருமையாக கூறினார். அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இந்திய வம்சாவளியினர் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.