×

காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

 

காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

90 சட்டப்பேரவை தொதிகளைக் கொண்ட  ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு  செப். 18,  செப். 25 மற்றும்  அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்று உள்ளதாலும்,   சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல்  என்பதால் இந்தத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. 

நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில்  தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 49 இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது.  இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார் என உமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். 

இந்நிலையில், காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்றும், காஷ்மீர் தேர்தல் வெற்றி ஜனநாயகத்திற்கும் இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கான  மாநில அந்தஸ்தை ஒன்றிய பாஜக அரசு பறித்து அநீதி இழைத்து விட்டது.  மாநில அந்தஸ்து மற்றும்  காஷ்மீர் கண்ணியத்தை திரும்ப பெற மக்கள் அளித்த தீர்ப்பு தான் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.