×

வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!

 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று (18.11.2024) சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் மு.பா.அன்புச்சோழன் (மக்கள் தொடர்பு) மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது., தமிழ்ப் பற்று-ஈகையுணர்வு-விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.