தூத்துக்குடியில் அமைகிறது பசுமை ஹைட்ரஜன் அலகு - முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல்..
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய உள்ள செம்கார்ப் நிறுவனத்தின் பசுமை ஹைட்ரஜன் அலகிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு, கடந்த ஜன.7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. 2 நாட்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன. அதேபோல் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் செம்கார்ப் நிறுவன உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிறுவனம் அமைவதன் மூலம் 1,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.