×

தமிழக மீனவர்கள் விவகாரம் :  வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. 

 

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 11 பேருடன்,  ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர்  நேற்று சிறை பிடித்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,  இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் தமிழ்நாட்டு மீனவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றும்,  இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

2024 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை 324 மீனவர்கள் 44 படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்ப்பு காண வேண்டியது அவசியம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கியுள்ளனர் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.