பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு!
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை "அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக" தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் நவம்பர் 4, 2024 அன்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, இதற்கான அறிவிப்பை 6 நவம்பர் 2024 அன்று தமிழ்நாடு அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை. உலக சுகாதார அமைப்பு (WHO) பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப் பட்ட பாம்பு கடி விஷத்தைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் (NAPSE) ஒரு சுகாதார அணுகுமுறை மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்பு கடி இறப்புகளை பாதியாகக் குறைப்பதற்கான வரைபடத்தை உருவாக்கி உள்ளது. பாம்பு கடியால் அதிக பாதிப்பும் மற்றும் இறப்பும் ஏற்படுகிறது, விவசாயத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாம்பு கடியை "அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக" மாற்றுவதன் மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் மூலம் சிகிச்சை மேம்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம்- ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (IHIP- IDSP) கீழ் பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பு தொடர்பான அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கையிலும், IHIP – IDSP தரவுகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடு உள்ளது.
பாம்பு கடி பற்றிய அறிவிப்பு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்குத் தரவைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்குகிறது. இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.