பள்ளிக்கல்வித் துறை வாகனத்தில் "JESUS LOVES YOU" - தமிழக அரசு விளக்கம்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வாகனத்தில் மத வாசகம் இடம்பெற்றிருப்பதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் நிலையில், தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மோசமான காலம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒன்று போனால் ஒன்று என அடுத்தடுத்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கு, அசோக்நகர் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு, அசிரியர் தினத்தன்று நடைபெற்ற பாதபூஜை , மதுரை புத்தக திருவிழாவில் மாணவிகள் சாமியாடியது என அடுத்தடுத்து பிரச்சனைகள் அம்புகளாக பாய்ந்துகொண்டிருக்கின்றன.
இந்தவரிசையில் அடுத்த பிரச்சனையாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வாகனத்தில் “இயேசு உங்களை நேசிக்கிறார்” என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் மறுத்து விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வாகனத்தில் "JESUS LOVES YOU" என்ற கிறிஸ்தவ மத வாசகம் ஒட்டப்பட்டிருப்பதாக ஒரு காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது தவறான தகவல்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் தனியார் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்த வாகனங்களில் 'G' என்ற ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதுகுறித்த செய்தியிலும் இப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் வாகனத்தை அரசு வாகனம் என்று குறிப்பிட்டு அதில் கிறிஸ்தவ மத வாசகம் இடம்பெற்றுள்ளதாகத் தவறாகப் பரப்பி வருகிறார்கள். வதந்தியைப் பரப்பாதீர்! மதவெறுப்பைத் தூண்டாதீர்!” என்று குறிப்பிட்டுள்ளது.