×

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி - வெங்காயம் விற்பனை - தமிழ்நாடு அரசு ஏற்பாடு..!

 


வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அவற்றை பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறது.  

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்து விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம்  மொத்த விற்பனையில்  1 கிலோ தக்காளி ரூ.35க்கு விற்பனையான நிலையில், கடந்த வாரத்தில் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த மாதம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  தற்போது  ரூ.80 வரையும், மற்ற இடங்களில் ரூ. 90 வரையிலும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதேபோல் வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது.  

இதன்கரணமாக  பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம்,  தக்காளி விற்பனையை தமிழ்நாடு அரசு தொடங்கியது.  விலை சற்று உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து கொண்டு  வரப்பட்டு தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணை  பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. 

பண்ணை  பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே போல் பண்ணை  பசுமை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.