×

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அக்.4ல் போராட்டம் - தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு.. 

 

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அக்டோபர் 4ம் தேதி மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகளை அரசியல் கட்சியினர் பதிவு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இம்மசோதா நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கூட்டமைப்புகளின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “ நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக குழு மசோதா தொடர்பான கருத்துக்களை கேட்டு வருகிறது. 

இந்த சூழ்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வக்பு திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று பேசி உள்ளார்.  இது ஜனநாயகத்திற்கு அரசியல் சட்டத்திற்கு எதிரானது.  மேலும் நாடாளுமன்ற வரலாற்றிலேயே 115 திருத்தங்களை கொண்ட சட்ட திருத்த மசோதாவாக இந்த மசோதா இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு அளித்த உரிமைகளை சிதைக்கக் கூடிய வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. எனவேதான் அனைத்து முஸ்லிம்களும் அமைப்புகள் மற்றும் அரசியல் கூட்டமைப்பின் சார்பாக இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுளோம். 

இது ஆரம்பம் மட்டுமே தவிர விவசாயிகள் போராட்டத்தின் தொடர்பாக எவ்வாறு ஒன்றிய அரசு நிறைவேற்ற சட்டங்களை திரும்பப் பெற்றதோ, அதேபோன்று இந்த மசோதாவை திரும்பப் பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும்.  சென்னையில் ராஜரத்தினம் அரங்கம் அருகே அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் திமுக காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்” என்று தெரிவித்தார்.