கஸ்தூரியை தீவிரவாதியை போல் நடத்துவதா? தமிழிசை கொந்தளிப்பு
தவறான கருத்தை தெரிவித்ததற்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டபின்பும், அவரை ஒரு தீவிரவாதி போல காவல்துறையினர் நடத்துவது சரியானதல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டி தியாகிகள் நினைவிடத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “வ.உ.சி அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்திய பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று போராடியவர். அவர் பெயரை கொண்ட தூத்துக்குடி துறைமுகத்திற்கு 170 கோடி ரூபாயில் மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.
தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொள்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற முறையில் நம் மாநிலத்திற்கு அதிகமான நிதி பகிர்வு வரவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டிருக்க வேண்டும். மருத்துவத்துறை கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்கான இடங்களை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் பெற முடியாததற்கான காரணம், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பாதது தான். அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிவதற்கு தவறு என்ற ஒரு சட்டம் ஆந்திராவில் உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். சிப்காட் வேண்டுமென திருமாவளவன் கோரிக்கை நிறைவேற்றிய முதலமைச்சர், டாஸ்மாக் மூட வேண்டும் என்ற மதுவிலக்கு கோரிக்கை வைத்தாரே அதை நிறைவேற்றுவாரா?
கஸ்தூரி விவகாரத்தில் அவர் தவறான கருத்துக்களை சொன்னார், மன்னிப்பு கேட்டார். அதே நேரத்தில் அவரை தீவிரவாதி போல தமிழக காவல்துறை நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல. காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் கொலையுண்டு இத்தனை மாதங்கள் ஆகியும், கொலையாளிகளை கண்டறியவில்லை, வேங்கையியல் விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை, இப்படி எவ்வளவோ பிரச்சனைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் கஸ்தூரி அவர்களை தீவிரவாதி போல நடத்துவது, பாரபட்சமாக நடந்து கொள்வதாக உள்ளது. சில பேர் கருத்துக்களை தீவிரமாக கண்டிக்கிறார்கள், சில பேரை கண்டிப்பதில்லை” என்றார்.