×

அண்ணாமலை, பாஜகவை பற்றி பேச விரும்பவில்லை- தமிழிசை

 

அண்ணாமலை மற்றும் பாஜகவை பற்றி பேச விரும்பவில்லை என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் வருகை தந்த முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்திருந்தால் பாராளுமன்றத்தில் நல்ல நிலைமை இருந்திருக்கும். ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் இந்துக்கள் என்றால் வன்முறையாளர்கள் என ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமான விமர்சித்திருக்கிறார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திற்கு என்று ஒரு விதிமுறை இருக்கிறது, நடைமுறை இருக்கிறது. இதை எல்லாம் மீறி படம் காண்பித்து கொண்டு இருந்தார். நேற்று இதை மூன்று அமைச்சர்கள் அவருக்கு எழுந்து பதில் சொன்னார்கள், எதிர்மறையாக சொன்னார்கள். 

நாட்டிற்கு இன்னுயிரை ஈன்றவர்கள் அவருக்கு எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை என்ற தவறான கருத்தை சொன்னார். உடனே ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் உயிர் தியாகத்திற்காக இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்தார். விவசாயிகளுக்கு பயிர்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் என தவறான ஒரு கருத்தை ராகுல் சொன்னார். அதற்கும் அமைச்சரவையிலிருந்து பதில் அளிக்க வேண்டி வந்தது. அதே போல் உள்துறை அமைச்சரும் அவர் சொன்ன கருத்திற்கு பதிலளிக்க வேண்டி வந்தது. நேற்று நீங்கள் பாராளுமன்றத்தை பார்த்தீர்கள் என்றால் ஏதோ தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்றும்,  எதிர்மறை பேச்சாக பயிற்சியின்மை, முதிர்ச்சியின்மையோடு எதிர்க்கட்சி தலைவர் பேசியதை பேசுவது போல் தான் ராகுல் காந்தி பேசினார். அண்ணாமலை மற்றும் பாஜகவை பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.