திருமாவளவனின் மதுவிலக்கு மாநாட்டிற்கு டாஸ்மாக் நடத்துபவர்கள் தான் ஸ்பான்சர்கள்- தமிழிசை
பிரதமர் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்த நாளை ஒட்டி பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன் கடைசியில் சிறுத்துப் போய் இருக்கிறார். ஆட்சியில் பங்கு கேட்போம் என ஒரு வீடியோவை பரவ விட்டுவிட்டு பின் நான் போடவில்லை அட்மின் தான் போட்டார் என சினிமா போல நாடகத்தை நடத்தி வருகிறார். முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் சிறுத்து போகிவிட்டார். திமுகவை மேடையில் வைத்துக் கொண்டு மதுவிலக்கை பற்றி எப்படி பேச முடியும்?. திருமாவளவனின் மதுவிலக்கு மாநாட்டிற்கு டாஸ்மாக் நடத்துபவர்கள் தான் ஸ்பான்சர்களாக இருக்கிறார்கள். திருமாவளவனின் மதுவிலக்கு மாநாடு தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஒத்துக் கொள்ளாத தமிழக அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையை கொடுத்தால் ஒப்புக்கொள்வார்களா? கருப்பு சட்டை போடுபவர்களுக்கு காவிகளின் சார்பில் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் எதிர்மறை அரசியலைக் கொண்டு வந்தது திமுக தான். பொய்யே அரசியலாக கொண்டவர்கள் திமுககாரர்கள். இந்தி யாத்திரை நடத்திய காங்கிரசை தோளில் சுமந்து கொண்டு திமுக அரசியல் நடத்தி வருகிறது. தேசிய கொள்கையை கொண்ட மாற்று சக்தி தமிழ்நாட்டில் வரவேண்டும். ஓணத்திற்கு வாழ்த்து சொல்லி இருந்த முதல்வரின் வாழ்த்து செய்தி இரு மொழிக் கொள்கையில் வருமா? மும்மொழி கொள்கையில் வருமா? தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை இருக்கும்போது அரசு பள்ளிகளில் ஏன் இருமொழிக் கொள்கை? ஏழைகளுக்கு ஒரு கல்வி ஏற்றம் பெற்றவர்களுக்கு ஒரு கல்வி, இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.