×

அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா?- தமிழிசை

 

அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை  சார்பில் கடந்த 17.12.2021-ஆம் நாள் வெளியிடப்பட்ட 1037 என்ற எண் கொண்ட அரசாணையின்  7(இ) பிரிவின்படி,  தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள்,  பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.  ஆனால் கோவையில் செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரு பாடல்களும் பாடப்படவில்லை.  அன்னை தமிழையும்,  தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனத எக்ஸ் பக்கத்தில், “தமிழ்த் தாயை  புறக்கணிப்பது  நியாயமா? தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே... அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ் தாய்  வாழ்த்தில்  பாடியவர்களின் குறையில்  ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள்... உங்கள் அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.. குறை இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர.. தமிழ் தாய் வாழ்த்து பாடுவதையே  குறைப்பது நியாயமா... பாடியதில் குறை கண்ட நீங்கள்  பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா.. குறையோடு பாடுவது அநீதி... அதற்காக..பாடாமல் இருப்பது நீதியா?...” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.