மதுவை ஒழிக்க மாநாடு- யாரை ஏமாற்றுவதற்கு இந்த அரசியல் நாடகம்: பாஜக விளாசல்
தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று திரு. திருமாவளவன் உளப்பூர்வமாக நினைத்து இருந்தால், டாஸ்மாக் கடைகளை லாபகரமாக நடத்தி வரும் தனது கூட்டணிக் கட்சியான திமுக-வை எதிர்த்து தானே போராடியிருக்க வேண்டும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், “தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கும் திமுக அரசை இணைத்துக் கொண்டு, திரு. திருமாவளவன் “மது ஒழிப்பு மாநாடு” நடத்துவதுதான் சுவாரஸ்யமான நகைமுரண்! எதிர்க்கட்சியாக இருந்தபோது “மதுவை ஓழிக்க வேண்டும்” என்று கூக்குரலிட்ட திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிகள், ஆலயங்கள் என எவ்வித வரம்புமின்றி அனைத்து இடங்களிலும் டாஸ்மாக்கைத் திறந்து வைத்து, பள்ளிச் சிறார்கள் வகுப்பறையிலேயே மது அருந்துமளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் “டார்கெட்” வைத்து மது விற்பனை செய்து, தமிழகத்தை மது போதையின் பிடியில் சிக்கவைத்துள்ளது இந்த திராவிட மாடல்.இவ்வாறு, தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று திரு. திருமாவளவன் அவர்கள் உளப்பூர்வமாக நினைத்து இருந்தால், டாஸ்மாக் கடைகளை லாபகரமாக நடத்தி வரும் தனது கூட்டணிக் கட்சியான திமுக-வை எதிர்த்து தானே போராடியிருக்க வேண்டும்? மதுவை ஒழிக்க மாநாடு நடத்தி எதற்கு வீண் செலவு செய்யவேண்டும்? தனது கூட்டணிக் கட்சியான திமுகவிடம் பேசி, அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே மதுவிலக்கை அமல்படுத்த பரிந்துரைக்கலாமே? அதை விட்டுவிட்டு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வைத்து கணிசமாக வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசையும் இணைத்துக் கொண்டு, “மது ஒழிப்பு மாநாடு” என்ற பெயரில் கண்துடைப்பு அரசியல் நாடகம் நடத்துவது யாரை ஏமாற்றுவதற்காக?
எனவே, மதுவிலக்கு வேண்டும் என்ற விசிக-வின் கோரிக்கை அரசியல் கலப்படமற்ற உண்மைக் கொள்கையாக இருக்குமாயின், நாளுக்கு நாள் டாஸ்மாக் கடைகளை பெருக்கிவரும், திமுக அரசுக்கு எதிராக அவர்கள் குரலெழுப்ப வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.