×

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி...25ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

 

கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (23-11-2024) காலை 0830 மணி அளவில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 25 ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

23-11-2024:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.11.2024:கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-11-2024 கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.