மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் அனைத்து பணியாளர்களும் இடைநீக்கம் – டாஸ்மாக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளரான மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24,986 ஊழியர்கள் இதுவரையிலும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. பெரிய அளவில் வருமானம் பார்த்து வரும் டாஸ்மாக் நிறுவனம் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்குகிறது.
இந்த நிலையில், மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மட்டுமின்றி அந்தக் கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்து இருப்பது சட்டவிரோதமானது. காலனி ஆதிக்க காலத்தில்தான் தனிப்பட்ட நபர்கள் தவறு செய்தால் ஒட்டுமொத்த தண்டனை வழங்கப்பட்டது.
அதே நடைமுறையை தற்போதும் பின்பற்றி மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர் தவிர அந்தக்கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர் என கடந்த அக்.29-ம் தேதி பிறப்பித்துள்ள சுற்றறிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதச்சக்ரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ”இந்த வழக்கில் டாஸ்மாக் தரப்பு விளக்கத்தை கோராமல் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது” எனக் கூறி விசாரணையை வரும் நவ.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.