×

ஆசிரியர் தினம் : பாடப்புத்தகங்களைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் ஆசிரியர்கள் - முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து

 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம்  கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு #TeachersDay வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆசிரியர் தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டுவதோடு அவர்களுக்கு எதிர்கால இலக்குகளையும் அடையாளம்காட்டி வெற்றித்திசையை சுட்டிக்காட்டிடும் அறிவுச்சுடர்களான ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான ஆசிரியர்தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் 

கல்வி கற்றிடின் கழிந்திடும் மடமை
கற்பதுவே உன் முதற்கடமை - என்ற பாவேந்தரின் வார்த்தைகளைப் பசுமரத்தாணிபோல மாணவர்களின் மனதில் பதியச் செய்து பார்போற்றும் நல்லவராக பொதுநலச்சிந்தையில் புடம்போட்ட தங்கங்களாக மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்

ஓர்ஆசிரியரின் எழுதுகோல் குனிகிறபோதெல்லாம் அங்கே ஒருதலைமுறை தழைத்தோங்கி தலைநிமிர்ந்து நிற்கும் என்பது முற்றிலும் உண்மை சமூகநீதி காத்து சமுதாய ஏற்றத்திற்கான மாற்றத்தையும் மலர்ச்சியையும் வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள் இத்தகைய சிறப்பான பொறுப்பினை சிரமேற்கொண்டு உளிபடாமல் துளி சிதறாமல் எதிர்கால உலகத்தைச் சிரத்தையாய்ச் செதுக்கும் ஆசிரியச் சிற்பிகளுக்கு எனது உளங்கனிந்த ஆசிரியர்தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சிஅடைகிறேன்.” என்று  தெரிவித்துள்ளார்.

இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளும் ,ஆசிரியர்தினமுமான இன்று, ஆகச்சிறந்த கல்வி என்னும் சொத்தை அளித்து மகத்தான மாணவர்களை உருவாக்கி, நாளைய உலகம் மடைமைகளை தகர்த்தெறிந்து, அறிவுசார் வளர்ச்சியின் அடிப்படையில் இயங்குவதற்கான அடித்தளமிடும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் #ஆசிரியர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.