×

குற்றவாளிகளை பாதுகாக்க முயலும் தளி காவல்துறை - முத்தரசன் கண்டனம்.. 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் துறை குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வது கண்டனத்திற்குரியது என இந்திய கம்யினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டம் சாரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த பெண் பாலக்கோடு, அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த சுபாஸ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததுடன், கடந்த 15.09.2024 அன்று சுபாஷுடன் 15 பேர் கும்பலாக சென்று, மாணவியை மிரட்டி கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் தளி காவல் நிலையத்தில் 16.09.2024 அன்று புகார் அளித்துள்ளனர். 

புகார் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்கு மாறாக, குற்றவாளிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, புகார் கொடுத்தவர்களை மிரட்டி, வழக்கை திரும்ப பெற வேண்டுமென்று வற்புறுத்துவது மட்டுமல்ல, திரும்ப பெறாவிட்டால் மாணவியின் புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவோம் என அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு, குறிப்பாக  முதலமைச்சர் தலையிட்டு  சமூக விரோத சக்திகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் முதலமைச்சரின் நிலைப்பாட்டிற்கு எதிராக, தளி காவல் துறை செயல்படுவது வியப்பை அளிக்கின்றது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.