×

சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி - நடிகை கஸ்தூரி..!

 

நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இது குறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தேடிவந்தனர். கடந்த 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.‌

புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. எனினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப் பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் அவர் இன்று வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் நடிகை கஸ்தூரி. சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு நின்று வரவேற்றனர். அப்போது, “மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க!” என்று அவர்கள் முழக்கமிட்டனர். சால்வை அணிவித்து வரவேற்றனர்.

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவளித்த தெலங்கானா, ஆந்திர மக்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.