எடுக்கப்போகும் நடவடிக்கை..! அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக அமையும் - அன்பில் மகேஷ்..
“பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக அமையும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் ஆணவத்தோடு பேசியிருந்தார். மாற்றுத்திறனாளிகள் உணர்வை காயப்படுத்தியதோடு, எதிர்ப்பு தெரிவித்த பார்வையற்ற ஆசிரியரையும் அறிவற்றவர் என சொற்பொழிவாளர் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரலெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் 'கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்ம் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் உள்ளது” என்றார்.