மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை - இரா.முத்தரசன்..!
மீனவர்கள் மீதான வழக்கை விசாரித்த கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் முதலில் படகில் சென்ற 12 மீனவர்களுக்கு
ரூ.5 கோடியே 40 லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது. மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கில், இந்திய தூதரகம் தலையிட்டுள்ளதால், அதன் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரதிர்ச்சி தருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை. இப்போது இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெற்றுள்ள மீனவர்கள் தலா ரூ.42 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது கற்பனைக்கு எட்டாத தாக்குதலாகும். தமிழக மீனவர்களை ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும். மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, தூதரகம் மூலமாக மத்திய அரசு சட்டரீதியான உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.