×

கணவரின் வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட மனைவியின் சடலம்! புதுக்கோட்டையில் பரபரப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கைவிட்டுச் சென்ற கணவனின் வீட்டு முன்பு தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை அவரது உறவினர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த ராமையன் மகள் புவனேஸ்வரி என்பவருக்கும் தெற்கு பொன்னன் விடுதி கிராமத்தை சேர்ந்த அவரது அத்தை மகனான பழனிராஜனும் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து ஓராண்டுக்குள் புவனேஸ்வரியை விட்டுச் சென்ற பழனிராஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளி மாவட்டத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி தனது தந்தை வீட்டிலேயே வந்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்து புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் பழனிராஜ் புவனேஸ்வரியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றதால் மனம் உடைந்து புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி நேற்று இரவு புவனேஸ்வரியின் உடலை பழனிராஜின் வீட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பழனிராஜின் தாய் தந்தை சகோதரர் உள்ளிட்ட யாரும் அங்கு இல்லை. புவனேஸ்வரி இறந்ததுமே அவர்கள் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்பு அங்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.மேலும் தெற்கு பொண்ணன்விடுதி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மாலை புவனேஸ்வரியின் உடலை ஊருக்கு கொண்டு வந்த அவரது உறவினர்கள் நேராக கொண்டு சென்று அவரது கணவர் பழனிராஜின் வீட்டு முன்பு வைத்து தீயிட்டு எரித்துள்ளனர். நேற்று இரவு முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தும் கூட அதனையும் மீறி புவனேஸ்வரியின் உறவினர்கள் பழனிராஜன் வீட்டு முன்பு இறுதி காரியங்கள் செய்து அவரது உடலை எரித்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மனைவியை விட்டுச் சென்ற பழனிராஜை போலீசார் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புவனேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது. புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஏற்கனவே மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கணவனின் வீட்டு முன்பு புவனேஸ்வரியின் உடல் எரியூட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.