×

‘முதல்வரை அப்படி சொன்னது தப்புதான்..’ வருத்தம் தெரிவித்ததால் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து
 

 

ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்ற காவல்நிலையத்திற்கு சென்றபோது  முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் 2022 பிப்ரவரி 20ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், திருச்சியில் தங்கி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் காலை 10.30 மணிக்கு இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமின் நிபந்தனை நிறைவேற்ற கண்டோண்மென்ட் காவல் நிலையத்திற்கு  சென்றபோது, முதல்வர் எதிராகவும் அரசு எதிராகவும் கோஷங்களுக்கு எழுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கி.முகிலன், நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்றும்,
காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது 100 ஆதரவாளர்களுடனும், அரசுக்கு எதிராகவும் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதாக எதிர்ப்பு தெரிவித்தார்.


இதற்கு ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , அவர் கோஷமிடவில்லை என்றும் உடன் வந்தவர்கள் தான் கோஷமிட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதி, யாரையும் அவர் கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை என்பதால், ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.