×

ரூ.9,000 கோடி மதிப்பில் கார் உற்பத்தி ஆலை - முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

 

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ. 9000 கோடியில் அமையவுள்ள டாடா கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  

தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இலக்கு நிர்ணயத்துள்ளார். அதனை நோக்கிய பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் மற்றுமொரு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது.  இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் பெறப்பட்டன.  
 
இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9,000 கோடி மதிப்பில் 410 ஏக்கரில் புதிய கார் உற்பத்தி ஆலையை டாடா நிறுவனம் அமைக்கிறது.  சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் புதிதாக அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  இந்த விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேக்ரன், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா , ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

இந்த டாடா மோட்டார் தொழிற்சாலையில் ஜாகுவார் லேன்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யப்பட உள்ளன.   இந்த புதிய கார் உற்பத்தி ஆலை மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.  மேலும் இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.    

மேலும்,  ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மெகா காலணி உற்பத்தி ஆலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த காலணி நிறுவனம் அமைவதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.