குப்பையில் கிடந்த ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கலி- உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்
சென்னை அடையாறு பகுதியில் குப்பையில் தவறவிட்ட ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பாலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை அடையார் பகுதியில் உள்ள பரமேஸ்வரி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி சந்தானம். இவர் தெரியாமல் தனது ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உர்பேசர் சுமீத்தின் பேட்டரியில் இயங்கும் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பாலு. குப்பைகளைப் பிரிக்கும் போது இந்த தங்க நகையை கண்டுபிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காமாட்சி சந்தானத்தின் தங்க நகை தொலைந்த தகவலை அறிந்த பாலு தங்க நகையை உரியவரிடம் நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து காணாமல் போன தங்க நகை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த காமாட்சி- சந்தானம் தம்பதியினர் தூய்மை பணியாளர் குழுவை நேரில் அழைத்து நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தகவல் அறிந்த அதிகாரிகளும், சக ஊழியர்களும் பாலுவுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது குப்பையில் தவறவிட்ட தங்க நகையை அதன் உரிமையாளரிடம் தேடிச் சென்று தூய்மைப் பணியாளர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.