அரசு மருத்துவமனையில் போதையில் மருத்துவம் பார்த்த டாக்டர்!
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் மது போதையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் மீது விசாரணை மேற்கொள்ள 2 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர் இருதய பகுதியில் வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர் அந்த நோயாளியை இசிஜி எடுத்து வரச் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். இசிஜி எடுத்து முடிந்த பின் அத்தகைய நோயாளி மருத்துவரை சந்திக்க வந்தபோது, மற்றொரு நோயாளியின் இசிஜியை பார்த்து அவருக்கு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அத்தகைய நோயாளியின் உறவினர்கள் இதைக் கண்டு நல்ல தம்பியை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நல்லதம்பி மது போதையில் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து உறவினர்களிடமிருந்து போலீசார் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர் இருதய வலிப்புக்காக சிகிச்சை பெற வந்த நோயாளியை வேறொரு நோயாளியின் இசிஜி வைத்து மது போதையில் இருந்த மருத்துவர் மருத்துவம் பார்த்த சம்பவம் திருவள்ளூர் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் மதுபோதையில் தான் பணிக்கு வந்து தவறாக மருத்துவம் பார்த்தார என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவமனை முதல்வர் ரேவதி 2 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்துள்ளார்.