×

இந்த முடிவை மின்வாரியம் கைவிடனும்.. 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்க - டிடிவி தினகரன்..

 

ஒரே வளாகத்திலிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும் என்றும்,  அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒரே பெயரில் மற்றும் ஒரே வளாகத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, தனித்தனியாக வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை ஒருவருக்கு மட்டும் வழங்க மின்வாரியம் முடிவு செய்து அதனை அமல்படுத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஒரே பெயரிலோ அல்லது ஒரே வளாகத்திலோ இருக்கும் மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் மின்வாரியத்தின் முடிவால் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடைக்கு குடியிருப்போர் வழக்கமாக செலுத்தும் மின்கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டே இதுபோன்ற செய்திகள் வெளியான நிலையில், ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை ஒன்றாக இணைக்கப்படாது எனவும், அவற்றிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த மின்வாரியமே அதனை மீறுவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளை கடந்த பின்பும் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் அமைந்துள்ளது. 

எனவே, ஒரே வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என மின்வாரியத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.