×

11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை

 

இரண்டு பேரை தாக்கிக் கொன்ற தெய்வானை யானை 11 நாட்களுக்கு பிறகு வெளியே அழைத்து வரப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருவார்கள்.

இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில் யானை கடந்த 10 தினங்களாக அதை கட்டி வைத்துள்ள அறையில் இருந்து வந்தது. மேலும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து வந்தது.

இந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக யானை அந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். இதற்காக அதிகாலையில் யானையை குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கிய யானை பாகன்கள் யானையை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து அறைக்கு அருகே கட்டியுள்ளனர். மேலும் யானைக்கு பச்சை நாற்று உணவாக வழங்கப்பட்டு வருகிறது. அதை தெய்வானை யானை உண்டு மகிழ்ந்து வருகிறது. இதை அந்த வழியாக செல்லும் பக்தர்கள் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர்.

இதற்கிடையில் இந்த அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு யானைக்காக சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாகசலை பூஜைகள் நடந்தது. இதில் கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கோயில் யானை தெய்வானைக்கு தெளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் யானை கட்டப்பட்டிருந்த அந்த அறைக்கும் சம்பவம் நடந்த இடத்திற்கும் இந்த புனித நீர் தெளிக்கப்பட்டது.