×

ஜெருசலேம் புனித பயணத்திற்கு நிதியுதவி ரூ.60 ஆயிரமாக உயர்வு...

 

ஆண்டுதோறும் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் அருட்சகோதரர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு, தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியின்போது ரூ.37 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கான நிதியுதவி ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில்,” பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையில் ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ. 37 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது .

அதனைத்தொடர்ந்து அந்த மானிய தொகையை உயர்த்தி வழங்குமாறும், அதனை செயல்படுத்தும் வகையில் தேவையான கூடுதல் நிதி ரூ.11.5 லட்சத்தை 2021 - 2022 ஆம் நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு ஜெருசலேம் சென்றுவர நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு  மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை ரூ.37 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.