×

தரமற்ற சாலையால் தலை சிதைந்து உயிரிழந்த பெண்.. புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த பெற்றோர்

 

விபத்தில் தலை சிதைந்து உயிரிழந்த கடலூர் இளம் பெண், தலைக்கு பதில் புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த பெற்றோரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 கடலுார் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நித்யா (26), இவரது தோழி ஹரிணி (26), இருவரும், சோழிங்கநல்லுாரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, பல்லாவரத்தில் இருந்து டி.வி.எஸ்., ஜூபி டர் வாகனத்தில் வீடு திரும்பினர். பரங்கிமலை வேளச்சேரி உள்வட்டச் சாலையில், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலம் அருகே பின்னால் வந்த மினி லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் இருந்த நித்யா ஹெல் மெட் அணிந்திருந்தும், லாரி சக்கரம் ஏறி இறங்கி தலை சிதைந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டி வந்த ஹரிணி, லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுனரான, ராணிப்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார்(21) என்பவரை, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நித்தியாவின் உடல் கடலூர் அரிசி பெரியாங்குப்பம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு தயார் செய்தனர் ஆனால் தலை சிதைந்து அவர் உயிரிழந்த காரணத்தினால் அவரது தலைக்கு பதில் அவரது புகைப்படத்தை வைத்து உருவமாக செய்து அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தி அந்த உடலை அவர்கள் அடக்கம் செய்தனர்.