×

கோரிக்கைக்கு பணிந்த அரசு.. வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற ஈரோடு விசைத்தறியாளர்கள்..

 

ஈரோட்டில் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட விசைத்தறியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.  
 
தமிழகத்தில்  ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது 1 கோடியே  77 லட்சம் வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விசைத்தறியாளர்களுக்கு 238 கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி திட்டத்தில், இந்த ஆண்டு சேலை உற்பத்திக்கு காட்டன்  நூலுக்கு பதிலாக தமிழ்நாடு அரசு பாலிஸ்டர் நூல் வழங்க முடிவுசெய்திருந்தது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஈரோடு விசைத்தறியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

பாலிஸ்டர் நூல் மூலம்  குறைந்த அளவு மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்றும், விசைத்தறி நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் எனவும்,  உரிய நேரத்தில் உற்பத்தி செய்து பொங்கல் பண்டிகைக்கு கொடுக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும், இதனால் வெளிமாநிலங்களில் சேலையை கொள்முதல் செய்யும் நிலை உருவாகும் எனவும் ஈரோடு விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்..
 
அரசு கடந்த ஆண்டுகளை போல் காட்டன் நூல் மூலம் சேலை உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரகத்திற்கு உட்பட்ட விசைத்தறியாளர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியத்து. இந்த நிலையில் ஈரோடு விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்ததை வாபஸ் பெற்றுள்ளனர்.  

விசைத்தறியாளர்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.   விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கு மீண்டும் காட்டன் நூல் வழங்குவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து போராட்டம்  வாபஸ் பெறப்பட்டுள்ளது.