×

நடத்துநர்  கொல்லப்பட்ட சம்பவம்;  சென்னையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆர்ப்பாட்டம்..!!

 

உயிரிழந்த நடத்துனரின் மரணத்திற்கு நீதி கேட்டு,  சென்னை வியாசர்பாடி அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

எம்கேபி நகர் - கோயம்பேடு மார்க்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்து 46Gல் நடத்துனராக பணிபுரிபவர் ஜெகன்குமார்(52).  இவர் நேற்று வழக்கம்போல  பணியில் இருந்தபொழுது அரும்பாக்கம் அருகே கோவிந்தன்(65) என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்  ஏறியுள்ளார்.  அவரிடம் அனைவருக்கும் பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துடர் கேட்டுள்ளார்.   பெண்களுக்கு இலவசம் பயணம் என அரசு அறிவித்திருக்கும்போது, தனது  மனைவிக்கும் ஏன் டிக்கெட் வாங்க வேண்டும் என கோவிந்தன் கேட்டுள்ளார்.  இதனால் இருவருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதமானது முற்றி கைகலப்பாக மாறியிருக்கிறது.  

இதில் கோவிந்தன்,  நடத்துனர் ஜெகனை அருகில் உள்ள கம்பியில் தலையில் முட்டியதாக தெரிகிறது.  இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நடத்துனருக்கு தலையில் ரத்தம் வெளியேறியுள்ளது.   இதனை அடுத்து அருகில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் அவரை மீட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் மூக்கில் ரத்தம் வழிந்தபடியே அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றும் பொழுதே உயிர் இழந்துவிட்டதாக தெரிகிறது. இதனை எடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். 

இதனால் நேற்று இரவே மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  மேலும் இந்த சம்பவத்தைக்  கண்டிக்கும் விதமாக சென்னை மகாகவி பாரதி நகரில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் ஒன்று கூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது போன்று தொழிலாளர்கள் உயிரிழப்பை தமிழக அரசு தடுக்க வேண்டும் என கூறியும் அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் திடீரென அவர்கள் பேருந்து இயக்குவதை தவிர்த்து நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இதேபோல் சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் பணிமனையில் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..