×

’உயர் சாதி பொண்ணு கேக்குதா?’.. இளைஞரின் தாயை கடத்தி சென்று வாயில் மது ஊற்றி பலாத்காரம்

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்த குறவர் இனத்தை சார்ந்த சுரேந்தர் எனும் இளைஞரும், கணபதிபட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ரா எனும் இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்காததால், காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் ஆதிக்க சாதியினர் 20-க்கும் மேற்பட்டோர் மது போதையில், சுரேந்தரின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் தாயாரை சாதிப்பெயரை சொல்லி இழிவாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த சுரேந்தரின் உறவினரின் கழுத்தை நெறித்து கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். கல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி, சாதிப்பெயரை சொல்லி தீண்டாமை கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் சுரேந்தரின் தந்தை செல்வம் பலத்த காயமடைந்துள்ளார்.

அதோடு சுரேந்தரின் தாயார் முருகம்மாளை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். கடத்தி காட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண் என்ற ஒரே காரணத்திற்காக 20-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினர் அவரது சேலையை அவிழ்த்து மன உளைச்சலை உருவாக்கி, மதுவினை வாயில் ஊற்றி கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இரவில் கடத்திச்செல்லப்பட்ட பெண் மறுநாள் காலையில் தான் கண்டுபிடிக்கப்படுகிறார். அந்த பெண்ணை கடத்தி சென்றவர்கள் விடுவித்திருந்த நிலையில், சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீசார் அழைத்து வந்துள்ளார். பயத்தால் பேச்சின்றி, மன உளைச்சலுக்குள்ளாகி அப்பெண் காட்சியளித்துள்ளார். பட்டியலின மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புக்குள் புகுந்து பெண்ணின் சேலை கழற்றி இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.