×

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

 

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில்  அடைத்த உத்தரவு உள்நோக்கம் கொண்டதால் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்  அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். 

இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைத்ததாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைக்கேட்ட நீதிபதிகள், மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன, அரசு அதனை முடக்க கூடாது. ஆகவே யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில்  அடைத்த உத்தரவு உள்நோக்கம் கொண்டதால் ரத்து செய்யப்படுகிறது. மேலும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.