×

சிறார்களை கோயிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூசாரி

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டல்  செய்த கோவில் பூசாரியை பொதுமக்கள் தாக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவிலில்  திலகர் (வயது 70) முதியவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த  இரண்டு சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி பதறி அடித்து  கோவிலில் இருந்து வந்து  நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அறிந்த  சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் கோவில் முன்பாக கூடியதை தொடர்ந்து, உறவினர்கள் தாக்க வந்து விடுவார்கள் என எண்ணி கோவில் பூசாரி  கோவிலை பூட்டிக் கொண்டு கோவிலுக்குள் ஒளிந்து கொண்டார். இதனை அடுத்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கோவிலை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருந்த பூசாரியை அழைத்து கோவிலைத் திறந்து கோவிலுக்குள் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில், சிறுவர் சிறுமியரின் உறவினர்கள் பெருமளவு திரண்டு வந்து  பூசாரியை தாக்கும் முயற்சியில் ஈடுபட  முற்பட்டதால், காவல்துறையினர்  கோவில் பூசாரி திலகரை பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின்  பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர்  பூசாரிதிலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர்.