×

"அய்யோ முடியலயே..!" பாலியல் வழக்கில் சிக்கிய பள்ளி முதல்வர், செயலாளருக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி 

 

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்த சம்பவத்தில் பள்ளிச் செயலரைத் தொடர்ந்து பள்ளி முதல்வரும் நெஞ்சுவலி காரணமாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 நபர்களை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனியார் விடுதியில் தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்க கூடாது என்று மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளியில் இதுகுறித்து முறையிட்ட போது பள்ளி நிர்வாகம் இதுகுறித்து முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலையில் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாச்சியர் பாலசுந்தரம் உள்பட அதிகாரிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை கோவை மாவட்ட காவல்துறையினர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர். மேலும் அவர் மீது திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் உடற்கல்வி ஆசிரியர் மீது புகார் அளிக்காமல் உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி, மற்றும் பள்ளியின் செயலர் செய்யத் அஹமத் இருவரும் ஆசிரியருக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது கோவையில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.  இவர்கள் மூன்று நபர்கள் மீதும் போசோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.  

இந்நிலையில் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி செயலாளரிடம் விசாரணை நடத்தியபோது, பள்ளி செயலாளர் செய்யது அகமது தனக்கு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில் தற்போது பள்ளி முதல்வர் சார்லஸ் சுவீட்லியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தனக்கும் நெஞ்சு வலிப்பதாக பள்ளி முதல்வர் சார்லஸ் சுவீட்லி கூறியுள்ளார். இதையடுத்து பள்ளி முதல்வர் சார்லஸ் சுவீட்லியையும் போலீசார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பள்ளி செயலர் மற்றும் பள்ளி முதல்வர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.