சாலையை மொத்தமாக மூடி மறைத்த மணல்- தள்ளாடியப்படி செல்லும் வாகனஓட்டிகள்!
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றம் காரணமாக மீண்டும் மணல் திட்டுக்களாக மாறிய சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் திணறிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் இருந்து காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம், எல்என்டி கப்பல் கட்டும் தளம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தினசரி இருசக்கர வாகனங்களில் இந்த சாலையில் பயணித்து வேலைக்கு சென்று வருகின்றனர்.
பழவேற்காட்டில் இருந்து சுமார் 12கிமீ தூரம் உள்ள இந்த சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது. கடலுக்கும் அருகே உள்ள பழவேற்காடு ஏரிக்கும் இடையே பழவேற்காடு - காட்டுப்பள்ளி செல்லும் சாலை அமைந்துள்ளது. கருங்காலி - சிந்தாமனிக்குப்பம் பகுதியில் பழைய முகத்துவாரத்தில் அவ்வப்போது கடல் சீற்றம் காரணமாக கொந்தளித்து கடல்நீருடன் கடல் மணல் அடித்து வரப்பட்டு சாலையில் குவிந்துள்ளது.
மீண்டும் கடல்நீருடன் மணல் திட்டுக்கள் சாலையில் தேங்கி கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். கருங்காலி - சிந்தாமனிகுப்பம் பகுதியில் பழைய முகத்துவாரத்தில் மணல் திட்டுக்களில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புயல், மழை, அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சாலையில் கடல்நீர் புகுவதும், சாலை துண்டிப்பு காரணமாக சுமார் 12கிமீ தூரத்திற்கு பதிலாக 40கிமீ சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
பழைய முகத்துவாரம் பகுதியில் சாலையை சிரமமின்றி கடந்து செல்ல மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை கிடப்பில் உள்ள நிலையில் உடனடி தீர்வாக சாலையில் குவிந்துள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி வாகனங்கள் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.