“புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல..” குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கே வந்து சின்னத்திரை நடிகை
புகார் கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கே வந்து புகாரளித்த சின்னத்திரை நடிகையால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா தண்டலம் கோவூர் பகுதிக்கு உட்பட்ட இரண்டாம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியை வசிப்பவர் சின்னத்திரை நடிகை பாண்டியன் ஸ்டோர் புகழ் கௌதமி. இந்த நிலையில் சின்னத்திரை நடிகை கௌதமி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதிற்கும் நாள் கூட்டத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர், கழிவு நீர் உள்ளிட்டவை தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குறைகளை நிவர்த்தி செய்ய பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியும், மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு சுகாதார சீர்கேடு பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.
சின்னத்திரை நடிகை கௌதமியின் கோரிக்கை மனுவினை உடனடியாக குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டார். சின்னத்திரை நடிகை கௌதமி நேரில் வந்து சுகாதார சீர்கேடு குறித்து புகார் மனு அளித்ததால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.