×

காவல்நிலையம் எதிரே உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி! கடைசியில் நடந்த டிவிஸ்ட்
 

 

காவல்நிலையம் எதிரே உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி

சென்னை திருவல்லிக்கேணியில் காவல் நிலையம் எதிரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஷட்டர், க்ரில் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையன் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் பேங்க் (SBI) செயல்பட்டு வருகிறது. தரைதளத்தில் எஸ்பிஐ ஏடிஎம் , முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் வங்கி செயல்படுகிறது.  இன்று காலை வங்கியின் அலுவலக நேரத்தில் திறப்பதற்காக ஊழியர்கள் வந்தபோது, முதல் தளத்தில் வங்கியின் ஷட்டர் கதவும், அதற்கு அடுத்துள்ள க்ரில் கேட்-ம் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு நபர் உள்ளே நுழையும் வகையில் திறந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து வங்கிக்கு எதிரிலேயே, சாலையின் மறுபக்கம் இருந்த திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக போலீசார் ஓடி வந்தனர். பின்னர் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சந்தோஷ் அதிமானி உள்ளிட்ட அதிகாரிகளும் வங்கிக்கு வந்தனர். வங்கியின் உள்ளே சென்று பார்த்ததில் பல கோடி மதிப்புடைய நகை இருந்த லாக்கர்கள், கோடி கணக்கில் பணம் இருந்த லாக்கர்கள் எல்லாம் திறக்க முயற்சி செய்து கொள்ளை முயற்சி மட்டுமே நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சிசிடிவியை ஆய்வு செய்ததில் வழக்கமாக வங்கியை கொள்ளையடிக்கும் கைதேர்ந்த கொள்ளை கும்பல் இல்லை எனவும் ஒரே நபர் மட்டுமே இரும்பு கம்பி போன்ற சிறு ஆயுதங்களை பயன்படுத்தி உடைக்க முயற்சி செய்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் மோப்ப நாய் தடயவியல் துறை நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்களை சேகரித்தனர். வங்கியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் கொள்ளையனை அடையாளம் காணும் நடவடிக்கையில்  ஈடுப்பட்டுள்ளனர்.  நேற்று நள்ளிரவில் வங்கியில் புகுந்த கொள்ளையன் கொள்ளை முயற்சி ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் அதே வேளையில், வங்கி கட்டிடத்தை ஒட்டி உள்ள ரேடியோ வேர் ஹவுஸ் என்ற நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையன் அதே பின் வழியாக ஷட்டர் கதவுகளை உடைத்துக் கொண்டு நுழைந்ததும் விலை மதிப்பு குறைந்த ஒரு சில பொருட்களை மட்டுமே அங்கிருந்து கொள்ளை அடித்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக அந்த ரேடியோ நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று (வியாழக் கிழமை) சிசிடிவி ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளார். ரேடியோ நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் அடையாளங்கள் தெளிவாக இருந்தும் அவரை இதுவரை கைது செய்யாததாலும், காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நேற்று ஒரு சம்பவம் நடந்தபோது உரிய கண்காணிப்பு மேற்கொள்ளாததாலும் இன்று அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கொள்ளையன் உள்ளே நுழைந்து துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளான். இரு சம்பவத்திலும் ஒரே கொள்ளையன் தான் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.