×

"கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்” - மு.க.ஸ்டாலின் 

 


“அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது” என பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது.  பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.  

அப்போது பேசிய முதல்வர், “சேகர்பாபு அமைச்சரான பிறகு அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக வழங்கி வருகிறது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும்.  அதில் உயர்வு - தாழ்வு  என எதுவும் இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. அனைவரத்கு நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.  

முருகன் கோயில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன. பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டு வருகிறது.  அறுபடை ஆன்மிக சுற்றுப்பயணத்துக்கு 813 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கட்டணம் இன்றி முடி காணிக்கை செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.  திடீரென மாநாடு நடத்தவில்லை. பல திருப்பணிகலை செய்த பிறகே பழனி மாநாடு நடைபெறுகிறது. கோவில் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு துணையாக உள்ளது. கோவில்களில் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. 

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டாத, சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும்; அறத்தால் உலகம் நன்றாகும்” என்று பேசினார்.