பாஜக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது- திருமாவளவன்
பட்டியல் சமூகத்தினரை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “அதானி ஊழல் முறைகேடுகள் பற்றி மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் அதானி போன்றோர் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு அவர்களின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அண்மையில் உச்சநீதிமன்றம் எஸ்எஸ்டி மக்களை மாநில வாரியாக பல்வேறு குழுக்களாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரம் அளிக்கக்கூடிய தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல எண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை. உள் ஒதுக்கீடு என்பது வேறு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிளவுபடுத்துவது என்பது வேறு. அதை எதிர்த்து வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் ஒரே தொகுப்புக்குளாக உள்ளார்கள். அதில் கணிசமாக மக்கள் தொகை கொண்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை திமுக தலைவராக இருந்த கலைஞர் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினர். அதில் விசிக சார்பில் பங்கேற்று அந்த கோரிக்கை ஆதரவு தெரிவித்தோம், அதன் அடிப்படையில் அருந்ததியினர் சமூகத்தினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு திமுக வழங்கியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை நீதி கிடைக்க வேண்டும், அவருடைய கொலைக்கு காரணமானவர்கள் தூண்டி விட்டவர்கள், திட்டமிட்டவர்கள், பண உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர் படுகொலை வைத்து அரசியல் காய்களை நகர்த்துவதை விசிக விருப்பமில்லை.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் உடைமைகள் அனைத்தையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.