×

யாரை துணை முதலமைச்சர் ஆக்குவது என்பது ஆளுங்கட்சி எடுக்கும் முடிவு- திருமாவளவன்

 

விசிக மதுவிலக்கு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதிமுக பங்கேற்கும் என எடப்படி பழனிசாமி கூறியிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாட்டிற்கு, யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அது ஏதோ உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதாக ஐயப்படுகிறோம். இது அதிபர் ஆட்சி முறைக்கு வழி வகுத்து விடும் என்கின்ற அச்சம் உள்ளது. ஆகவே ஏற்கனவே இது குறித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றோம். ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களோடு இணைந்து இதற்கு எதிர்ப்பாக மேலும் வலுவாக குரல் கொடுப்போம். யாரை துணை முதலமைச்சர் ஆக்குவது என்பது ஆளுங்கட்சி எடுக்கும் முடிவு.
 
பாஜக நீண்ட காலமாக இந்து அறநிலையத்துறை தொடர்பான கருத்தை சொல்லி வருகிறது.  இந்துக்களின் நலனுக்காக, இந்து கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்காக, வருகிற நிதி முறையாக செலவு செய்யப்படுவதற்காக கோவில்களை மேம்படுத்துவதற்காக  இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதே தவிர அது இந்து சமூகத்திற்கு எதிரானது அல்ல, வேண்டும் என்றே பாஜகவினர் திரும்பத் திரும்ப கோவில், கடவுள், மதம் என்பதை சொல்லி அரசியல் செய்வது முழுக்க முழுக்க அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காகத்தான். இதை இந்து பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த மக்கள் நம்ப மாட்டார்கள்.

மாநாடு தொடர்பாக பொதுவான அறைகூவல் விடுத்தோம், இது பொதுவான மக்கள் கோரிக்கை, மாநாட்டில் பங்கேற்குமாறு தனிப்பட்ட முறையில் யாருக்கும் கடிதம் எழுதி இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. எமது கட்சியின் உயர்நிலை குழுவில் உள்ள முன்னிலை பொறுப்பாளர்களோடு கலந்து பேசியதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்த மாநாட்டில் பிரதிநிதிகள் பங்கேற்கின்ற சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அந்த கட்சிகளின் மகளிர் அணியை சார்ந்த தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் அவர்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கின்றோம்” என்றார்.