×

பெரும்பாலான இனிப்புகளில் விலங்கு கொழுப்பு இருக்கு! இதை அரசியலாக்குவது ஏன்?- திருமாவளவன்

 

பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமாக உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான் இதனையும் அரசியலாக்குவது ஏன்? என்று தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் புதூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 14ஆம் தேதி இரவு 62 அடி கட்சிக்கொடி கம்பம் நடப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதால் கட்சி கொடி கம்பத்தை இரவோடு இரவாக காவல்துறையினரால் அகற்றப்பட்டது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை மீண்டும் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டு அதே பகுதியில் நடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்திற்கு பின்பு நடப்பட்ட கொடிக்கம்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றி வைத்து, விசிக அரசியல் அங்கிகாரம் பெற்ற விழாவாக நடத்தினார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய அளவில் ஒரு சலசலப்பை உருவாக்குவதற்கு பாஜக முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் ஆதரவு தர வேண்டும், அதற்கு வாய்ப்பு குறைவு. ஒரே நாடு ஒரே தேர்தல் கோட்பாடு என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிப்பதற்கான முயற்சி என அச்சப்படுகிறோம். இது தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்தை சந்தித்து இந்த ஒரேநாடு ஒரேதேர்தல் முறையை கைவிட வேண்டும். அதனை நடைமுறைபடுத்த அனுமதிக்கூடாது என விசிக சார்பில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளோம். ஆகவே இதனை எதிர்க்கிறோம். ஒருமித்த கருத்துடைய அரசியல் சக்திகளோடு இணைந்து எதிர்ப்பை பதிவு செய்வோம்.

பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் இது போன்ற விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமாக  உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதனையும் அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை. அதில் விலங்கு கொழுப்பு மற்றும் மாட்டுக்கொழுப்பு இருக்கக்கூடாது என்றால் அதற்குரிய வழிகாட்டுதலை செய்து இதுபோன்று இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.